செவ்வாய், 23 செப்டம்பர், 2014

ரயிலில் பெண்களுக்கு உதவி செய்ய 1322

ரயிலில் பெண்களுக்கு உதவி செய்ய 1322
ரெயிலில் பெண்களின் பாதுகாப்புக்கு இலவச அழைப்பு எண் ‘1322’ பயணிகள் வரவேற்பு ; -------------------------------------------------------------------------------------------பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி ரெயில்வே பாதுகாப்பு படையின் இலவச அழைப்பு எண் ‘1322’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயணிகள் வரவேற்றுள்ளனர்.
ரெயில் பயணங்கள்
விழாக்களுக்காக சொந்த ஊருக்கு செல்லும்போதும், குடும்பத்தினருடன் வெளியூர்களுக்கு செல்லும்போதும் பாதுகாப்பு கருதி பெரும்பாலானோரால் தேர்ந்தெடுக்கப்படுவது ரெயில் பயணங்களே. ஆனால் தற்போது ரெயில் பயணங்களில் கூட பாதுகாப்பு குறித்த விமர்சனங்கள் எழுந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக மின்சார ரெயில்களில் தான் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் மின்சார ரெயில்களில் 200–க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கொள்ளைச்சம்பவம்
கடந்த ஆகஸ்ட்டு மாதம் 19–ந்தேதி, திருத்தணி – அரக்கோணம் இடையே செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் கத்தி முனையில் கொள்ளைச்சம்பவம் நடந்தது. இதில் அந்த பெண்ணிடம் இருந்து நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையன் மிரட்டி வாங்கியுள்ளான்.
இதையடுத்து மின்சார ரெயில்களில் இனி எவ்வித திருட்டும், கொள்ளைச்சம்பவங்களும் நடைபெறாத வகையில் 10 அம்ச திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சமூக விரோத செயல்கள் நடைபெறாத வகையிலும், பயணிகளின் பாதுகாப்பு கருதியும் ரெயில்வே பாதுகாப்புப்படை சார்பில் சென்னையில் உள்ள எல்லா மின்சார ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1322
ஆபத்து கால நேரங்களில் போன் செய்தோ அல்லது எஸ்.எம்.எஸ்.(குறுந்தகவல்) சேவையை பயன்படுத்தி ரெயில்வே பாதுகாப்புப்படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் ஆகியோரை தொடர்பு கொள்ள முறையே 9003161710, 9962500500 ஆகிய எண்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
தற்போது பெண் பயணிகளுக்கென்றே ‘1322’ என்ற புதிய 4 இலக்கு எண்ணை ரெயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது முற்றிலும் பெண் பயணிகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட இந்தியா முழுமைக்குமான ஒரே இணைப்பாகும். இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
இந்தியா முழுமைக்கும் ஒரே இணைப்பு
மின்சார ரெயில்களில் ஏற்படும் கொள்ளை உள்பட அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்களை கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்புக்காக ‘1322’ என்ற புதிய எண் அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் இந்த எண்ணை பயன்படுத்தலாம்.
ஒரு பெண் பயணி இந்த எண்ணை தொடர்பு கொள்ளும்போது, அடுத்த 4 விநாடிகளில் இந்த அழைப்பு எங்கிருந்து வந்ததோ? அந்த மாநிலத்தின் தலைநகருக்கும், மாவட்ட தலைநகருக்கும் அழைப்பு சேரும் வகையில் இந்த வழித்தட எண் உருவாக்கப்பட்டிருக்கிறது. எல்லா வகையான மொழிகளிலும் உதவி கிடைக்கக்கூடிய வகையில் இந்தத்திட்டம் உள்ளது. உதாரணத்திற்கு தமிழ் பயணி ஒருவர் டெல்லியில் சென்று, இந்த எண்ணை தொடர்பு கொள்ளுகையில், மொழி புரிதல் பிரச்சினை ஏற்பட்டால், அடுத்த 5 நொடிகளில் தமிழ் இணைப்பு கிடைக்கும். இதன்மூலம் தகவல் பரிமாற்றம் விரைவாக நடக்கும். பிரச்சினையிலிருந்து பெண்கள் மீள நல்ல வழிவகையாகவும் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்கத்தக்கது
இதுகுறித்து பெண் பயணிகள் சிலர் கூறுகையில், ‘‘இந்தியா முழுவதுக்கும் ஒரே எண்ணான 1322 என்ற எண்ணை அறிமுகப்படுத்தியது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் இந்த எண்ணை நியாபகம் வைத்துக்கொள்ளலாம். ஏனெனில், வெளி மாநில மொழிகளை எல்லா பெண்களும் அறிவதில்லை. ஆனால் அந்த பிரச்சினையையும் தீர்த்து வைப்பதாக இந்த திட்டம் அமைந்துள்ளது. இந்த திட்டம் மற்றும் ‘1322’ எண் குறித்தும் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் அறிவார்கள்’’, என்றனர். நன்றி - தின தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக